×

காளையார்கோவில் ‘தென்றல், வசந்தம்’ நகர்களில் துர்நாற்றம் வீசுகிறது

காளையார்கோவில், அக். 30: காளையார்கோவில் தென்றல்நகர், வசந்தம்நகர் சாலைகளில் தேங்கும் மழைநீரால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்களும் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காளையார்கோவில் ஊராட்சிக்குட்பட்ட தென்றல்நகர், வசந்தம்நகர் பகுதிகள் காளையார்கோவிலில் இருந்து பரமக்குடி செல்லும் மாநில சாலையில் உள்ளன. இப்பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட், பேவர்பிளாக், தார்ச்சாலைகள் போடப்பட்டன. சமீபததில் மாநில சாலை ஓரமாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவன கேபிள் வயர் பதிப்பதற்காக இப்பகுதிகளின் சாலைகள் உடைத்து எடுக்கப்பட்டன. பணிகள் முடிந்த பின் அதனை சரியாக மூடாமல் சென்று விட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறுமழை பெய்தால் கூட சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. தென்றல்நகர் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதனால் மாணவ, மாணவியர் மற்றும் அப்பகுதி மக்கள் இச்சாலையில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோல் வசந்தம்நகரில் போக முடியாத அளவிற்கு சேறு, சகதி சாக்கடை போல் உள்ளதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. தற்போது டெங்கு, பன்றி காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்படைந்து வரும் நிலையில் இதுபோன்று தெருக்களில் மழைநீர் தேங்குவது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தென்றல்நகர், வசந்தம்நகர் சாலைகளை சீரமைத்து மழைநீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : calamity ,towns ,Breezy ,Kalaiyorko ,
× RELATED ஓடை உடைப்புகளை சரி செய்ய கோரிக்கை